Tuesday 6 December 2011

குல சாமி

என்ன தவம் செய்தேனோ !
உன் மகனா நான் பிறக்க
என்ன பாவம் செய்தாயோ
என்னை நீ ஈன்றெடுக்க …

என்னை நீ கரை சேர்க்க
எத்தனையோ பாடுபட்டும்
என்னதான் சுகத்தக் கண்டே
என்னப்பெத்த ஆத்தாவே ? ! …

கருவரையில் குடியிருக்கும்
கருமாரி சாமிகூட
காரியத்தை நிறைவேத்த
காசு பணம் கேட்கையில
கருச் சுமந்தக் கூலியின்னு
நீ ஒன்னும் கேட்கலையே !

ஒரு பயனும் இல்லையின்னு -நீ
உள்ளூற அறிஞ்சிருந்தும்
உன் உதிரத்தைப் பாலாக்கி
உணவாகத் தந்தாயே !
இதுபோல ஒரு மனசு
யாராத்தா உனக்குத் தந்தா?

உன்னைப் பத்தி ஒரு வார்த்தை
உண்மையாகச் சொல்லப் போனா
கோயிலில கொழுவிருக்கும்
சாமியெல்லாம் சாமியல்ல !
உண்மையான சாமி நீதான்
உயிர்காக்கும் குலசாமி …

இது மலர் பேசும்…மௌன மொழி…


உன் வீட்டுத் தோட்டத்தில் 
உனக்காகப் பூத்திருந்தேன்
என்னை ஏன் 
பொசுக்கென்று பறித்து
பூஜை அறையில்
வைத்துவிட்டாய் ?
                                                           .
அன்பே !,நான்
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னை இறைவனடி சேர்த்து
விடுகின்றாயே !

இதற்காகவா
இன்னொரு பிறவி எடுத்து
உன் வீட்டுத் தோட்டத்தின்
முற்றத்தில் பூத்திருந்தேன் ?

உன் கார் கூந்தலைச் 
சேர்வதற்கே
காத்திருந்த என்னை
மீண்டும் கடவுளின்
காலடியில் சமர்ப்பித்து
விட்டாயே !..

கதறுகிறேன் நான் !
கண்களை மூடிக்கொண்டு
தியானிக்கின்றாய் நீ !

பூஜை அறையில் நீ வணங்குவது
இறைவனை அல்ல ! – என்
பூத உடலுக்கு இறுதியஞ்சலி
செலுத்துகின்றாய் !..
 
என்னுயிர் ஊசலாடிக்
கொண்டிருக்கிறது...
நான் கருகிப் போவதற்குள்
உன் கார் கூந்தலில்
என்னைச் சூடிக்கொள் !
எனக்கு மோட்சம் கொடு! …